புதன், 9 பிப்ரவரி, 2011

ஓரிக்கை மகாஸ்வாமிகள் மணிமண்டபம்.

இறையடியார்களின் திருவடிகளுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

ஓரிக்கையில் மஹா சுவாமிகளின் அருளாணையின் பேரில் அடியார்களின் பக்தியாலும், காணிக்கைகளாலும் உருவாகி இருக்கும் காஞ்சி மாமுனிவர் ஸ்ரீ பரமாச்சார்ய மஹா சுவாமிகளின் மணிமண்டபத்தின் கும்பாபிஷேகம் பற்றிய டாக்டர் திவாஜி அவர்களின் அருமையான புகைப்படத் தொகுப்பும், தினமலர் செய்தியை வெளியிட்டிருந்த டாக்டர் சங்கர்ஜீயின் இடுகையும் படித்த அடியேன் சுவாமிகள் ஓரிக்கை செல்ல வேண்டும் என்ற அவரது உள்ளக் கிடக்கையை பின்னூட்டமாக வெளியிட்டார்.

அம்பாளின் அருட்குழந்தையான அன்பு மயமான அவருடன் ஓரிக்கை செல்ல நானும் எனது விருப்பத்தினை வெளிப்படுத்த அதன் தொடராக ஒரு அருமையான சத்சங்கம் இறைவன் திருவருளால் விளைந்தது.

உடனே திருமால்ஜீ, எங்களுடன் வருவதாக அறிவித்தார். பின்னர் புறப்படும் தேதி பற்றிய விரிவான தொலைபேசல்கள்/தனி மடல் என்று தொடர்பு கொண்ட பின்னர் ஏழாம் தேதி அன்று மதியம் சென்னையில் இருந்து ஓரிக்கைக்கு புறப்பட முடிவாயிற்று.

ஆனால், திருமால்ஜி சில காரணங்களினால் எங்களுடன் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால் நாங்கள் செல்வதற்கு முன்னதாகவே ஓரிக்கை சென்று வர மஹா சுவாமிகளிடம் இருந்து அவருக்கு அழைப்பு கிடைத்து விட்டது நம் குழுமத்தின் அன்பு மிக்க ஒரு சிவனடியாரை சந்திக்க இயலவில்லை என்று எண்ணிக் கொண்டு நானும் அடியேன் சுவாமியும் புறப்பட திட்டம் இட்டுக் கொண்டிருந்த போது, முதலில் வர இயலாமையை தெரிவித்த திரு சிங்கை குமார் இந்த வாரம் திடீர் விஜயமாக சென்னைக்கு வர நேர்ந்ததில் அவருடன் நானும் முத்துத் தம்பியும் ஓரிக்கை சென்று மகாஸ்வாமியின் தரிசனம் பெற்று வர திருவருள் கூட்டியது.

மஹாசுவாமிகளின் திருவுளப்படி 07.02.11 பிற்பகல் இரண்டு மணியளவில் நான் ஐ.ஐ.டி காம்பஸ் வெளிகேட்டில் காத்திருந்து இறையடியார்கள் அடியேன் சுவாமிகள், மற்றும சிவத்திரு சிங்கை குமார் அவர்களுடன் அவர்கள் வந்த காரில் சேர்ந்து கொண்டேன்.

அடியேன் சுவாமிகள் எனக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருக்கிறார். முதல் முறையாக சந்தித்த திரு குமார்ஜீயின் அறிமுகம் சிவானந்தமயமாக இருந்தது.

குமார்ஜீயை இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கிறோம் என்ற எண்ணமே எழவில்லை. அவரோடு பல ஆண்டுகள் பழகியவரைப் போல எங்களுடன் புன்னகை மாறாத முகத்துடன், இன்சொற்களால் எங்களுடன் உரையாடி வந்தார்.

சிங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்து வரும் திருமுறை மாநாடுகளில் அவர் செய்திருக்கும், செய்து வரும் சிவத்தொண்டு அளப்பரியது.

அவரது இறை அனுபவங்களை சுவையுடன் எங்களுக்கு சொல்லி வர எங்களது பயணம் சென்ற தூரம், நேரம் எதையும் நாங்கள் உணரவே இல்லை. அன்பு மயமான அந்த சந்திப்புக்காகத் தான் இந்தப் பிறவியையே இறைவன் எனக்குத் தந்திருக்கிறானோ என்று எண்ணி எண்ணி மகிழ வைத்த கணங்கள் அவை.

என்னுடன் பயணிக்கும் இந்த அடியார்களின் பண்புக்கும், அறிவுக்கும், இறை அனுபவத்துக்கும், தூய அன்புக்கும் ஏணி வைத்தாலும் எட்ட இயலாத, எந்தத் தகுதியும் இலாத எனக்கு மிகச் சிறந்த அன்புள்ளங்களை இறைவன் சந்திக்க வாய்ப்பு அளித்து வருவது பற்றி கூற வேண்டுமானால், இறைவனின் திருவருள் தகுதி அற்றவருக்கும் கிடைக்கும் என்பதற்கு ஒரு சான்று என்றுதான் கூற வேண்டும்.

இதனையே திருமூலர் தமது திருமந்திரத்தில்:

காலை ஏழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலுமவ்வீசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே.
திருமந்திரம் 182

வெறுமனே தூங்கி விழித்து உண்டு உறங்கி வீணே பொழுதை கழிப்பவர்களுக்கே ஈசன் அன்பு செய்வான் எனில், அந்த இறைவனைப் பணிந்து நிதமும் தொழுது வருபவர்களுக்கு இன்னமும் எவ்வளவு இன்பம் அவன் தருவான்? என்று திருமூலர் சொல்லியவாறு, எந்த ஒரு தகுதியும் இல்லாத என்னுடன் இறையடியவர்களை அறிமுகம் செய்து வைத்தது அந்த தகுதியை நீ அடைய முயலுவாயாக என்று இறைவன் என்பால் கொண்ட அன்போடு செய்ததாகவே நான் கருதினேன்.

காரில் அமர்ந்ததுமே குமார்ஜி அவரது அன்பு பரிசாக புத்தகங்கள், குறுந்தகடு தொகுப்பு ஒன்றை எனக்கு வழங்கி என்னை திக்குமுக்காடச் செய்து விட்டார். அவர் எனக்கு அன்பளித்த புத்தகங்கள்/குறுந்தகடு பற்றிய விவரங்கள்:

1. CD - திருமுறைப் பண்கள் (சிங்கையில் நடைபெற்ற முப்பதாம் ஆண்டு திருமுறை மாநாடு -2010 வெளியீடு)

2. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய 1008 தமிழ் வேத அருச்சனை மந்திரங்கள் (ஆறாம் திருமுறை - திருத்தாண்டகத்தில் இருந்து தொகுத்து வெளியிட்டவர்-சிவத்திரு வெள்ளைத்துரை, சிங்கப்பூர்)

3. திருவாவடுதுறை ஆதீன வெளியீடான ''விதியை வெல்வது எப்படி?'' என்கிற அருமையான நூல். கடந்த ஆண்டு திருவாவடுதுறை சென்று இருந்த போது நான் ஏற்கனவே வாங்கிய நூல். எனினும் சிவனடியார்களுக்கு பரிசளிக்க ஏற்ற நூல் என்பதால் குமார்ஜீ எனக்கு வழங்கிய இந்த நூல் ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம்.

4. தினம் தினம் திருமந்திரம் (ஸ்வாமி ஓங்கார், பிரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை வெளியீடு). 365 தேர்ந்தெடுக்கப்பட்ட திருமந்திரப் பாடல்கள் எளிய உரையுடன்).
இந்தப் புத்தகத்தை நான் வாங்க வேண்டும் என்று கடந்த வாரம் தான் நினைத்தேன். மகாஸ்வாமிகள் அருளால் திரு குமார்ஜி எனக்கு நான் வாங்க நினைத்த புத்தகத்தையே பரிசாக அளித்ததை எனக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன்.

எனது அன்பளிப்பாக ''ஆரோக்கியம் ஆனந்தம்'' என்னும் இயற்கை நலவாழ்வியல் புத்தகத்தினை (கோவை ரதி லோகநாதன்) சிங்கை குமார்ஜீக்கு வழங்கினேன். அடியேன் சுவாமிக்கும், குமார்ஜீக்கும் ஆப்பிள் பழங்களை தந்து மரியாதை தெரிவித்தேன்.

குமார்ஜியுடன் சம்பாஷித்து கொண்டே நாங்கள் பயணித்து சுமார் இரண்டரை மணி நேரப்பயணத்தில் காஞ்சி மாநகருக்குள் நுழைந்து பின்னர் நகரில் இருந்து செல்லும் உத்திரமேரூர் சாலையில் ஐந்து கி.மீ பயணித்து, ஓரிக்கை எனும் சிற்றூரில் பாலாற்றங்கரையின் ஓரத்தில் அமைந்துள்ள மகா ஸ்வாமிகள் மணி மண்டபத்தை சென்று அடைந்தோம்.

அது ஒரு இனிமையான ஞாயிறு மாலை பொழுது. பொன்னந்தி மாலை பொழுது என்றே சொல்லலாம். மணி மண்டபத்தின் பின்னணியில் மேற்கே சூரியன் தனது இளம் கதிர்களை வீசிக் கொண்டிருந்தது

பின்னணியில் வானம் பொன்னிறமாக தகதகத்துக் கொண்டிருக்க அருமையான கட்டிட வேலைப்பாட்டுடன், கோடிக்கணக்கான அன்பர்களின் இதய இருக்கைகளில் வீற்றிருக்கும், ஸ்ரீமஹா ஸ்வாமிகள் ஓரி(ரு)க்கையில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஒரு திருக்கோவிலாக இந்த மணிமண்டபம் பிரகதீஸ்வரத்தின் அற்புதமான கட்டிடப் பாணியில் காட்சி அளித்தது.

படங்களை காண விரும்பினால் இந்த சுட்டியை சொடுக்கவும். படங்கள் உபயம்: டாக்டர் அக்னிஹோத்திரி திருமூர்த்தி வாசுதேவன்:
https://picasaweb.google.com/agnihot3/Orikkai#

உள்ளிருந்து அருமையான வேதகோஷம் வழிந்து வெளியே வந்து எங்கள் செவிகளில் விழுந்து இதயங்களை நிறைத்துக் கொண்டிருக்க, நாங்கள் பக்திப் பரவசத்துடன் மண்டபத்துக்குள் நுழைந்தோம்.
(தொடரும்)

2 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி ஜி. மாஹப் பெரியவா உங்களுக்கு நீண்ட ஆரோக்யத்தை தரட்டும்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கு இதய நன்றி எல்.கே.

    பதிலளிநீக்கு